Friday, December 21, 2012

மாற்றம் என்பது உண்மையானது, நான் மாற்றத்தை நம்புகின்றேன்


(யூஸுப் அஸீரா)
'மாற்றம் என்பது உண்மையானது, மாற்றத்தை நம்புகின்றேன்' இது மிகப்பெரும் தத்துவம் மட்டுமல்ல யதார்த்தபூர்வமானது என்பதனை சமூக வலுவாக்கத்துக்கான வானொலி நாடகப் பயிற்சிப் பட்டறையின்போது அனுபவித்துக்கொண்டேன். ஆம் பயிற்சிப் பட்டறைக்குக் கலந்துகொள்ள சென்ற நோக்கம் எனக்கு கலை மேல் இருந்த காதல் மட்டுமே தவிர வேறில்லை. சமூகவலுவாக்கம் என்பது தொடர்பான எந்தவொரு எண்ணமோ அறிவோ இருக்கவில்லை என்பதுதான் உண்மை.  



பாடசாலையில் கற்கும் போதும் சரி பல்கலைக்கழகம் சென்ற பின்பும் சரி பல சமூகப்பிரச்சினைகள் என்னையும் புடம்போட்டன. கண் முண்னே பல அநியாயங்களும் வருத்தத்துக்குரிய விடயங்களும் நடந்தேறின. இதுபற்றி சிந்தித்து புயலாக வெளிவர மனம் துடிக்கும். ஆனால் நானோ போத்தலில் அடைபட்ட பூதமாகவே இருந்தேன். இவற்றுக்கான தீர்வுகளை தைரியமாக செயல்படுத்தவோ, பதிலடி கொடுக்கவோ, எனது கருத்துக்களைத் தெளிவாக முன்வைக்கவோ இயலாமல் இருந்தது.

இப்பொழுது என்னுள் புதுத்தெம்பு பிறந்துள்ளதை நான் உணர்கிறேன். நான் காணாத, கேட்டிராத பல விடயங்கள் பற்றி அறியக் கிடைத்தது.  நாடகம் என்பது வெறுமனே ஒரு கலையம்சம் என்றுதான் இவ்வளவு நாளும் எண்ணியிருந்தேன். ஆனால் சொல்வதைச் சொல்கிறோம், ஊருக்கே கேட்கட்டும் என்று கலையூடாக சமூகப் பிரச்சினைகளையும் நிகழ்வுகளையும் அலசி ஆராயும் மிக முக்கியமான ஊடகமாக இந்நாடகம் என்ற அம்சம் பிரதிபலிப்பதனை பயிற்சிப்பட்டறையில் நான் கற்றுக் கொண்டேன்.

இப்பொழுது சமூகத்துக்கு என்னால் இயன்றளவிலான சேவையினை செய்வதற்கான மிகப்பலம்மிக்க ஆயுதமாக நாடகம் இந்த இருக்கிறது. இந்த நாடகப் பயிற்சிப் பட்டறையின் மூலம் நேர முகாமைத்துவம், பொறுமை, நிதானம், பிரச்சினைகளை இனங்கண்டு தெளிவான தீர்வுகளைப் பெறுவது போன்றவற்றைக் கற்றுக் கொண்டேன்.

வானொலி நாடகத்தினூடான சமூக வலுவாக்கம்


(எல். வஸீம் அக்ரம்)
மிகவும் துரிதகதியில் சமூக மாற்றத்திற்கு வழிகோலுகின்ற ஒரு ஊடகாமாக வானொலியை நாம் அடையாளம் காண இயலும். அதனை மனித வலுவாக்க ஊடகம் அல்லது சமூக வலுவாக்க ஊடகம் என்று வரையறை செய்யலாம். வானொலியை சர்வதேச பொது ஊடகம் என்று குறிப்பிடுவர். உலகத்திலே மிக கிரமமாக, விரைவாக நுகரப்படுகின்ற ஊடகம் வானொலி ஆகும். இவ்வானொலி ஊடாகத்தில் நாடகம் ஒரு முக்கிய கூறாக இருக்கின்றது. 



நாடகம் என்பது ஒரு ஆளும் கலை. இதில் வானொலி நாடகம் செவிகளால் நுகரப்பட்டு காட்சிப் புலன்களை கண்ணால் பார்க்கின்ற ஒலியின் கலை என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தக் கலை இன்று பல்கிப் பெருகியுள்ள வானொலி ஊடகத்தால் நுட்பமான தன்மைகள் கொண்டு ஒழுங்கமைக்கப்படுகின்றதா என்ற விமரிசனத்தை அடிக்கடி வாசிக்க முடிகின்றது. (இது தமிழில் குறிப்பாக முஸ்லிம் நிகழ்ச்சியில் ஏன் தூக்கப்பட்டது என்பதே இன்றுள்ள ஆர்வளர்களின் கேள்வியாகும்)

இவ்வாரான விமரிசனங்கள் முன் வானொலி நாடகத்திற்கான ஒரு முழுமையானதும் சர்வதேச தரமிக்கதுமான ஒரு பயிற்சிப்பட்டரையை அண்மையில் முஸ்லிம்களுக்கான செயலகம் (SFM) இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர்கள் மன்றத்துடன் இணைந்து (SDJF) நடத்தியது. இந்நிகழ்வுக்கான ஊடக அனுசரணையை விடிவெள்ளி வழங்கியிருந்தது.

வானொலி நாடகம் சுமார் 6 தசாப்தாகால வரலாற்றைக் கொண்டது. இது ஒலி அரங்கு, ஒலி உலகு, ஒலிப் புனைவு என்று பல்வேறு பெயர் கொண்டு அழைக்கப்டுகின்றது. இந்த வனொலி நாடகத்திற்கு இலங்கை (வானொலி) ஊடக வரலாற்றில் குறிப்பிடத்தக்க பக்கங்கள் இருக்கின்றன. அதிலும் விசேடமாக முஸ்லிம் வானொலி நாடகம் தமிழ் வானொலியை சர்வமயப்படுத்த பெரும் தூணாக இருந்துது. இந்தப் வரலாற்றுப் பக்கங்கள் கறுப்பு, வெள்ளை என்ற இரு நிறங்களாலும் நிர்வகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதே உண்மை. 

இலங்கையில் வானொலி நாடகம் என்பது, மரபார்ந்த தன்மைகளால் ஒழுங்மைந்து ஒரு மைற்கல்லாக இருந்தும், அது தொடர்ச்சியான செயற்பாடின்றி இடையறுந்து எங்கோ தன்னைத் தேடும் ஒரு துறவியாக நிற்கின்றது. இந்தத் துறவியைக் கொண்டு விழுமியங்களையும் சமூக மாற்றத்தையும் நிறுவும் ஒரு முனைப்பையே முஸ்லிம் செயலகம் செயற்படுத்தியிருக்கின்றது அல்லது முயல்கின்றது.

இலங்கை முஸ்லிம்களின் இடப்பிரச்சினைகள், இருப்பு பிரச்சினைகள், இடப்பெயர்வு, சேரிவாழ்வு மற்றும் சமூக சகவாழ்வு என்பனவற்றினை தேடும் அலவுகோளுடன் முஸ்லிம் செயலகம், இலங்கை அபிவிருத்திக்கான ஊடக மன்றத்துடன் இணைந்து மேற்படி வானொலி நாடகப் பயிற்சியினை கண்டியில் தொடர்ச்சியாக மூன்று வாரங்களாக வார இறுதி நாட்களில் நடத்தியிருந்தது. 

இப்பயிற்சிப் பட்டறையில் பல்கலைக்கழக மாணவர்கள், இளம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் என்று சுமார் 25பேர் கலந்து கொண்டதுடன், பயிற்சி முடிவில் சுமார் 15 முழுமையான நாடகப் பிரதிகள் வரையப்பட்டுள்ளன. நாடகம் என்ற ஒரு இலக்கிய யதார்த்த வடிவம் பற்றி ஆகக் குறைந்த அறிவுள்ளவர்களே இதில் கலந்து கொண்டனர். இவர்களின் தொடர்ச்சியான ஈடுபாடு, ஏற்பாட்டாளர்களின் முழுமையான ஒழுங்கமைப்பு மற்றும் பயிற்சியாளர் எம்.சீ. ரஸ்மின் அளவிடமுடியாத (சர்வதேச) பயிற்சிகள் என்பனவற்றின் பெறுபேறே இந்த 15 நாடகப் பிரதிகளாகும். 

மாற்றம் என்பது உறுதியானது. நான் மாற்றத்தை நம்புகிறேன் என்ற விஞ்ஞான பூர்வமான அணுகுமுறைகள், இட்சியத்துடன் இந்த பயிற்சிகள் வெற்றிபெற வழிசமைத்தது. இலங்கையில் வானொலி நாடகம் என்ற துறை மரணத்திலிருந்து மீண்டு பீனிக்ஸ் பறவையாக வேண்டும் என்பது இதன் இன்னொரு செய்தியாகும். அதற்கு உயிர்கொடுக்க கடைசியில் விஞ்சிப்போனது விரல் விட்டு எண்ணத்தக்கவர்கள் மட்டும்தான். 

நாடகம் என்பது ஒரு கலை என்ற மேலெழுந்தவாரியான வாசிப்பை உடைத்து அதற்குள் விஞ்ஞான முறையினை ஆட்படுத்தி அதன் புனைவினை மரபார்ந்த தன்மைகள் மற்றும் விதிகளில் இருந்து நெகிழ்த்தி, எளிய முறையிலான வடிவங்கள் ஊடாக இலங்கையில் எந்த ஒருவரும் வானொலி நாடகத்தினை எழுதலாம் என்ற ஒரு திருப்பத்தை இந்த வானொலி நாடகப் பயிற்சி வழங்கியிருந்தது.

வானொலி நாடகம் என்ற ஒன்றை ஒரு கலையாக பாரத்தலின்றி அது ஒரு விஞ்ஞானக் கலை என்று நோக்குமளவிற்கு அது வளர்ந்துள்ளது என்பதை கற்றுக் கொள்ள இயல்ந்தது. வானொலி நாடகத்தினை பெரும்பாலானவர்கள் புனைவு வடிவமாகவும் சினிமா என்றும் கருதியிருந்த பிரக்ஞையை மறுதலித்து அது யதார்த்தங்கள் ஊடறுக்கும் ஒலி/ ஒளி என்று நிறுவியிருந்தது. 

இலங்கையில் வானொலி நாடகம் என்ற பிரதி வடிவ முயற்சி மற்றும் செயற்பொறிமுறை வரன்ட நிலமாக காட்சி தந்து கொண்டிருந்த போதே இந்த வானொலி நாடகப் பயிற்சி நெறி நடாத்தப்பட்டமை, பாலைவனத்தில் பெய்த மழையாக இருக்கின்றது.

இந்நிகழ்வில் துணை வளவாளர்களாக அஷ்ரப் சிஹாப்தீன் மற்றும் புர்கான் பீவி ஆகிய வானொலி நாடக நடிகர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் வானொலி நாடகத்தின் அடிப்படைத் தன்மைகள் மற்றும் தங்கள் அநுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். தவிரவும் USAID நிறுவனத்தின் இணைப்பாளர் அபுல் கலாம் முஸ்லிம் செயலகத்திற்கான இணைப்பாளர்கள் என்போரும் SDJF இன் நிகழ்ச்சித்திட்ட உத்தியோத்தர் அஸ்ஜைனும் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்வில் வனொலி நாடகம் குறிப்பாக முஸ்லிம் வானொலி நாடகம் சமூகத்தின் பிரச்சினைகளை மிகத் துல்லியமாக அடையாளப்படுத்தத் துணிந்ததுடன், சமூக எதிர்பார்க்கையை வானொலி நாடகத்தின் ஊடகா எவ்வாறு காட்டுவது, அது சமூகத்தின் எவ்வாறான பிரதிபலிப்புக்களை வெளிப்படுத்துவது என்ற வௌ;வேறான கட்டங்களை தாங்கியிருந்தது. 

வானொலி நாடகப் பயிற்சிப் பட்டறை என்று பார்க்கின்றபோது அது மரபார்ந்த ஊடகத்தை மட்டும் மையப்படுத்தியது என்ற வரம்பையும் தாண்டி, இது நவீன செல்நெறியின் குழந்தை, சர்வதேசம் முழுவதும் பின்தங்கிய மக்களது வாழ்வாதரத்தை கட்டியெழுப்புகின்ற ஒரு கருவி என்ற வியாக்கியானத்தை விதைத்தது. ஒரு உரையாடலாக அல்லது சினிமாவாக இந்த பயிற்சிப்பட்டறை இருக்காமல் அறிவுசார்ந்த சமூகத்தின் மீதான பாய்ச்சலை காட்டியது. நேரத்தின் மீதான காதலை தூண்டியிருந்தது.

இலங்கையில் வானொலி நாடகம் என்ற வரலாற்றிற்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்த எந்தியிருக்கின்றது. புதிய தலைமுறையினரின் பங்குபற்றலின்மை என்ற குறையை அல்லது இடைவெளியை நிரப்பி, வானொலி நாடகங்களை தொடர்ச்சியாக எழுதக்கூடிய ஒரு புதிய தலைமுறையை வெளிச்சம் போட்டிருக்கின்றது. இந்த வெளிச்சம் நிரந்தர வெளிச்சமாக மாறவேண்டும். அதற்கான களங்கள் உருவாக வேண்டும் என்பதே எமது அவா. வெற்றிச் சான்றிதழ்களுடன் காலங்கள் ஒழுகிவிடாது, சமூகத்தில் துவாரம் விழுந்துள்ள இடங்கள் மீது ஆக்கிரமிக்கின்ற ஒரு வீரியத்தை இந்த தலைமுறை வானொலி நாடகப் பயிலுனர்கள் பெற்றிருப்பர் என்பது காலத்தின் முன் அளிக்கப்படவுள்ள ஆற்றுகையாக பார்க்கலாம். 

Wednesday, November 14, 2012

மரித்தபின் உயிர்த்தெழும் வானொலி முஸ்லிம் நாடகங்கள்


(பஷீர் அலி)
முற்றத்தில் நிற்கும் நாவல் மர இலைகளை ஊடறுத்து நிலவொளி பளிச்சிடும். வாசலில் பரத்தியிருக்கும் குருத்து மணல் ஷபளார்| என்றிருக்கும். பக்கத்து வீட்டு ஆண்கள் பெண்கள் என முக்காடிட்டுக் குந்தியிருக்கும் இளமைக் காலத்து காட்சி கண்ணுக்குள் இருக்கிறது.

வேறnhன்றுமில்லை, செவ்வாய்க்கிழமை இரவு முஸ்லிம் நாடகம் கேட்பதற்கான மகாநாடுதான் இது. எங்கள் வாசலில் மட்டும் கூடும் மகாநாடல்ல அது அன்றைய யுத்த சூழலிலும் கிழக்கு மாகாணத்தில் பரவலாகக் காணும் காட்சி. தவிர, நாடுபூராகவும் உள்ள நேயர்களைக் கட்டிப் போட்டிருந்த பெருமை முஸ்லிம் சேவையின் நாடகத்துக்கு இருந்தது. புதன்கிழமை காலை தொட்டு இரண்டு, மூன்று நாட்களுக்கு அது எதிரொலிக்கும். பெரும்பாலும் பெண்களின் பலாய் அந்த நாடகத்தில் வந்த பாத்திரங்களாகத்தான் இருக்கும்.

சமூகத்தில் நடக்கின்ற நல்லது கெட்டதுகளுக்கு உதாரணங்களாக அந்த நாடகங்களே பேசப்படும். இப்படி, முஸ்லிம் சமூகத்தின்  அடிமட்டம் முதல் மேல்மட்டம் வரை ஆகர்ஷித்திருந்த முஸ்லிம் வானொலி நாடகத்துக்கு, என்ன கண்ணூறு பட்டதோ சில காலமாய் அது ஒலிபரப்பப்படுவதில்லை. ஆனாலும் முஸ்லிம் நாடகத்தின் திடீர் மறைவு நேயர்கள் மத்தியில் பாரிய இடைவெளியைத் தோற்றுவித்திருந்தது.

பின்னர் சின்னத்திரைகள் அடுப்படிகள் வரை புகுந்து விட்டதால் பெரும்பாலான பெண்களின் பொழுதுபோக்கு சின்னத்திரைகளுக்கே வாழ்க்கைப்பட்டுப் போனது. வில்லிகளாக வந்து கணவன்மாரை அதட்டி, ஊரையே தன் சுண்டு விரலுக்குள் கட்டிவைக்கும் கதாபாத்திரங்களே நேயர்களின் ஷரோல் மொடலாகினர்.

500 அங்கங்களைக் கடந்து செல்லும் உப்புச் சப்பில்லா இந்த சின்னத்திரைகள் முஸ்லிம் பெண்களையும் தன்பக்கம் ஈர்த்துக் கொண்டன. இருந்தாலும் அன்று ஒலிபரப்பாகும் முஸ்லிம் நாடகங்கள் பற்றிய கதையை எடுத்துவிட்டாலே போதும் அது பற்றி ஆர்வத்துடன் பேசும் பலரைக் காணலாம். எனவே, வானொலி முஸ்லிம் நாடகத்தின் தேவை இன்னும் வெற்றிடமாகவே இருக்கிறது.

இந்த வெற்றிடத்தை நிரப்பும் வண்ணம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் மீண்டும் புதிய நாடகங்கள் ஒலிபரப்பப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இந்த மகிழ்ச்சிகரமான செய்தியோடு, முஸ்லிம் நாடகத்தின் இன்றைய நிலையும் இடைவெளியின் தாக்கமும் புதிய தலைமுறையினருக்கு அதிலுள்ள பங்களிப்பும் குறித்து சற்று ஆராயலாம். உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் குறிப்பாக, தமிழ் நாட்டிலுள்ளோர் கூட கேட்கும் ஒரு நிகழ்ச்சிதான் முஸ்லிம் நாடகங்கள். வியப்பான விடயம் என்னவென்றால், முஸ்லிம் அல்லாதோரும் இதில் லயித்துப் போவதுதான். சினிமா ஆட்சி செய்யும் தமிழ் நாட்டிலேயே முஸ்லிம் சேவை நாடகங்களுக்கு மௌசு இருந்ததென்றால் அதன் தாக்கம் குறித்து சிந்திக்க வேண்டும்.

ஆயிரம் பேரைக் கூட்டிவைத்து நாள் முழுக்க பயான் செய்வதால் ஏற்படுத்த முடியுமான மாற்றத்தை, கலைத்துவத்துடன் அரை மணிநேர வானொலி நாடகத்தால் செய்ய முடியும். இதுவே நாடகம் எனும் ஊடகத்தின் தனித் தன்மைக்குப் போதுமான ஓர் எடுத்துக்காட்டாகும். வானொலி நாடகம் சமூகத்தில் சிறந்த கருத்து மாற்றத்தை செய்யும் என்பதை முஸ்லிம் சமூகம் காலம் தாழ்த்தியே கண்டு கொண்டது. ஆனால், இலங்கை தமிழ் சமூகம் இதனை 1925ஆம் ஆண்டளவிலேயே கண்டு கொண்டது. இருந்தாலும்  1940 களிலேயே தமிழ் நாடகத்தின் ஊடகப் பெறுமதி வலுப்பெற்றது எனலாம்.

1940களிலேயே முஸ்லிம் சேவையில் முஸ்லிம் நாடகங்கள் ஒலிபரப்பப்பட்டன. ஆனாலும் காலம் தாழ்த்தி ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் நாடகங்கள் தமிழ் நாடகங்களை விஞ்சிக் கொண்டு மேலெழுந்தன. முஸ்லிம் சேவையின் முதலாவது நாடகத் தயாரிப்பாளரான மர்ஹூம் எம்.எச். குத்தூஸ் மிகத் திறமையாகத் தனது பங்களிப்பை செய்தார். அவரின் நாடகத் தயாரிப்புத் திறமை சொற்ப காலத்திலேயே நேயர்களைக் கவர்ந்திருந்தது.

இவர் தயாரித்த நாடகங்களில் பீ.எச். அப்துல் 'மீட், ஏ.ஜவா'ர், ஏ.எஸ்.எம்.ஏ. ஜப்பார், கலைச் செல்வன், அமீனா பேகம், ஷெய் றஷீம் ஷாட், புர்கான் பீ போன்றோர் பாத்திரமேற்றுத் நடித்தனர். இவர்களின் குரல் வளமும் பாத்திரங்களை நகர்த்திச் செல்லும் பாங்கும் நேயர்கள் உள்ளங்களில் இவர்களைப் பதியச் செய்தது. பின்னர் தொண்ணூறுகளில் நாடகத் தயாரிப்பாளராகக் கடமையாற்றிய எம். அஷ்ரஃப்கான் அவர்களின் திறமையான நிருவாகத்தின் கீழ் காத்திரமான பல நாடகங்கள் ஒலிபரப்பப்பட்டன.

நாட்டை யுத்த மேகம் விழுங்கியிருந்த தொண்ணூறுகளில் மஃரிபுடன் கதவுகளை இழுத்து மூடிவிட்டு வீட்டுக்குள் முடங்கிக் கொள்ளும் பயங்கர நிலை வடக்கு, கிழக்கில் இருந்தது. ஆனாலும் செவ்வாய்க் கிழமை இரவுகளில் முஸ்லிம் நாடகம் கேட்பதற்காய் பக்கத்து வீடுகளில் உள்ளோர் எல்லாம் ஒன்றாகக் கூடி காத்திருக்கும் காட்சியை அங்குள்ள கிராமங்களில் காணலாம்.

இவ்வாறு தாக்கமிக்க ஊடகமான இந்த நாடகங்கள் மூடுவிழாக் கண்டன. ஏற்கனவே உள்ள தயாரிப்பாளர்களும் எழுத்தாளர்களும் நாடகக் கலைஞர்களும் இளம் படைப்பாளிகளை அடையாளம் காணத் தவறியதன் விளைவே இதற்கு முதற் காரணம் என்று கூறலாம். தங்கள் ஆளுமைகளை வளர்த்துக் கொள்வதிலும் அதனைத் தக்கவைத்துக் கொள்வதிலும் அவர்கள் காட்டிய கரிசனையை இன்னொரு தலைமுறைக்கு வழங்கத் தவறிவிட்டனர். கசப்பாக இருந்தாலும் இதுவே யதார்த்தமாகும்.

பின்னர், ஏற்கனவே ஒலிபரப்பாகி சேமித்து வைத்திருக்கின்ற பல நாடகங்கள் மீள் ஒலிபரப்பு செய்யப்பட்டன. அந்த ஒவ்வொரு நாடகமும் கலைத்துவத்துடனும் ஆகர்ஷத்தன்மையுடனும் அவை காணப்பட்டதால் அதனை மீண்டும் புதிதாகக் கேட்கின்ற உணர்வை கொடுத்தன.

இருந்தபோதும் பதிவு செய்யப்பட்டு பொக்கிஷங்களாக வைக்கப்பட்டிருந்த பல நாடகங்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலிருந்து மாயமாகி இருக்கிறதாம். திட்டமிட்டோ கவனயீனமாகவோ பல நாடகங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக மூத்த கலைஞர்கள் சிலர் முணுமுணுத்துக் கொள்கின்றனர். நாடகம் ஏற்படுத்துகின்ற சமூகத் தாக்கத்தின் விளைவை அடையாளம் கண்டு கொண்ட முஸ்லிம் சேவை முஸ்லிம் நாடகத்தை மீண்டும் ஆரம்பிக்க உள்ள செய்தி மிகவும் வரவேற்கத்தக்கது.

வானொலி நாடகத்தின் தேவை வலுவாக பேசப்படும் இத்தருணத்தில் இளைய தலைமுறை ஒன்றை இதற்குத் தயார்படுத்தும் தேவை உணரப்பட்டிருக்கிறது. இதனை உணர்ந்த இலங்கை அபிவிருத்திக்கான ஊடக மன்றம் முஸ்லிம் சமாதான செயலகத்தின் அனுசரணையில் வானொலி நாடகப் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்துகிறது. நாடுபூராகவுமிருந்து தெரிவு செய்யப்பட்ட 26 பேருக்கு நடத்தப்படும் இப்பயிற்சிப் பட்டறையில் சிறந்த நாடகங்களை எழுதுவதற்கான பூரண பயிற்சி வழங்கப்படுகிறது.

சமூகத்தின் ஆற்றல்களை சுமந்து வருகின்ற இந்த 26 இளம் கலைஞர்களையும் சமூகத்தின் குரலாக ஒலிக்கச் செய்ய அவர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் பொறுப்பு நம்மீது உள்ளது. பயிற்றப்பட்ட அந்த இளம் தலைமுறையினரிடமிருந்து காத்திரமான வெளியீடுகளைப் பெற்று சமூகத்துக்கு வழங்க அவர்களுக்குத் தொடர் ஊக்குவிப்புகளும் பயிற்சிகளும் தேவைப்படுகின்றன.

சமூக சிந்தனையோடு செயற்படும் தலைவர்கள் தமது புதிய சிந்தனையாக இதனை உள்வாங்க வேண்டும். அவர்களுக்கான தொடர் பயிற்சிகளுக்கும் ஆளுமை விருத்திக்கும் பங்களிப்பு செய்ய முன்வர வேண்டும். இது முஸ்லிம் சமூகத்தின் கலைசார் இருப்பு சார்ந்து சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும். சமூக ஆர்வலர்களே! வானலைகளில் தவழ்ந்துவரும் இவர்களின் சமூகப்பணி உங்கள் வியர்வைத் துளிகளாகவும் இருக்கட்டுமே.

நன்றி: எங்கள் தேசம்

வானொலி நாடகப் பயிற்சிப் பட்டறையின் முதற்கட்டம்

(முஹம்மட் பிறவ்ஸ்)

வானொலி நாடகவாக்கம் மற்றும் சமூக வலுவாக்கம் தொடர்பான உயர்நிலை கற்கைநெறி தற்போது நடைபெற்றுவருகின்றது. பல்கலைக்கழக மாணவர்கள், உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் என 25 பேர் இப்பயிற்சி நெறியில் கலந்துகொள்கின்றனர். இவர்கள் நாட்டின் நாலாபுறங்களிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிம் மாணவர்களில் இளைஞர், யுவதிகள் என இருபாலினரும் உள்வாங்கப்பட்டிருந்தனர். 



முஸ்லிம்களுக்கான செயலகம் (SFM) இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவிய லாளர் மன்றத்துடன் (SDJF) இணைந்து இந்த உயர்நிலை பயிற்சிநெறியை ஏற்பாடு செய்திருந்தது. அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று இப்பயிற்சிநெறிக்காக நிதி அனுசரணையை வழங்கியுள்ளது. இதில் பங்குபற்றும் மாணவர்களுக்கு வானொலி நாடகம் தொடர்பான நுட்பங்களை வழங்கி, அதன்மூலம் முஸ்லிம் சமூகத்திலுள்ள பிரச்சினைகளை கலைத்துவத்துடன் வெளிக்கொணர்ந்து அதற்கான தீர்வுகளை அடைய முயற்சிப்பதே இப்பயிற்சிநெறியின் பிரதான நோக்கமாகும்.

இப்பயிற்சிநெறி 8 நாட்களை உள்ளடக்கிய ஒரு வதிவிடப் பயிற்சிநெறியாகும். இதன் முதல் 3 நாட்களுக்கான பயிற்சிநெறி கடந்த 5,6,7ஆம் திகதிகளில் கண்டி, அம்பிட்டியவில் உள்ள மொண்டி பானோவில் இடம்பெற்றது. பயிற்சிநெறியின் வளவாளர்களாக நாடக எழுத்தாளரும் அறிவிப்பாளருமான எம். சி. ரஸ்மின் மற்றும் பிரபல எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆரம்ப கட்டப் பயிற்சியில் முஸ்லிம் சமூகத்திலுள்ள பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டன. பின்னர் அவை வகைப்படுத்தப்பட்டன. பிரபல எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் வானொலி நாடகங்களில் முஸ்லிம்களின் பின்னணி குறித்து விளக்கமளித்தார். அடுத்து, வானொலி நாடக எழுத்தாளர் எம்.சி.ரஸ்மின் வானொலி நாடகத்திலுள்ள நுணுக்கங்கள், அதன் கட்டமைப்பு, பாத்திரங்கள், கதைக்கரு உள்ளிட்ட நாடகத்தின் அனைத்து அம்சங்களையும் செயன்முறைப் பயிற்சிமூலம் கற்பித்தார். 

பயிற்சிநெறியில் கலந்துகொண்டவர்களுக்கு பாத்திரங்களை எழுதுதல், அதற்கான சம்பவங்களை உருவாக்குதல், சம்பவங்களை வைத்து கதையை உருவாக்குதல் போன்ற குழுப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. முஸ்லிம் சமூகத்திலுள்ள பிரச்சினைகளை புதிய யுக்தியின் மூலமாக வெளிக்கொணர முயற்சிக்கும் இப்புதிய முன்னெடுப்பு பாராட்டத்தக்கது. முஸ்லிம் சமூகத்திலுள்ள சேரிப்புற வாழ்க்கை, புலம்பெயர்வு, நில அபகரிப்பு, சமூக தலைமைத்துவங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இதற்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.

இப்பயிற்சி நெறியை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்யும் மாணவர்களுக்கு இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன், அவர்கள் எழுதுகின்ற வானொலி நாடகங்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலி சேவைகளில் ஒலிபரப்பாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நன்றி: நவமணி 14.10.2012