(யூஸுப் அஸீரா)
'மாற்றம் என்பது உண்மையானது, மாற்றத்தை நம்புகின்றேன்' இது மிகப்பெரும் தத்துவம் மட்டுமல்ல யதார்த்தபூர்வமானது என்பதனை சமூக வலுவாக்கத்துக்கான வானொலி நாடகப் பயிற்சிப் பட்டறையின்போது அனுபவித்துக்கொண்டேன். ஆம் பயிற்சிப் பட்டறைக்குக் கலந்துகொள்ள சென்ற நோக்கம் எனக்கு கலை மேல் இருந்த காதல் மட்டுமே தவிர வேறில்லை. சமூகவலுவாக்கம் என்பது தொடர்பான எந்தவொரு எண்ணமோ அறிவோ இருக்கவில்லை என்பதுதான் உண்மை.
பாடசாலையில் கற்கும் போதும் சரி பல்கலைக்கழகம் சென்ற பின்பும் சரி பல சமூகப்பிரச்சினைகள் என்னையும் புடம்போட்டன. கண் முண்னே பல அநியாயங்களும் வருத்தத்துக்குரிய விடயங்களும் நடந்தேறின. இதுபற்றி சிந்தித்து புயலாக வெளிவர மனம் துடிக்கும். ஆனால் நானோ போத்தலில் அடைபட்ட பூதமாகவே இருந்தேன். இவற்றுக்கான தீர்வுகளை தைரியமாக செயல்படுத்தவோ, பதிலடி கொடுக்கவோ, எனது கருத்துக்களைத் தெளிவாக முன்வைக்கவோ இயலாமல் இருந்தது.
இப்பொழுது என்னுள் புதுத்தெம்பு பிறந்துள்ளதை நான் உணர்கிறேன். நான் காணாத, கேட்டிராத பல விடயங்கள் பற்றி அறியக் கிடைத்தது. நாடகம் என்பது வெறுமனே ஒரு கலையம்சம் என்றுதான் இவ்வளவு நாளும் எண்ணியிருந்தேன். ஆனால் சொல்வதைச் சொல்கிறோம், ஊருக்கே கேட்கட்டும் என்று கலையூடாக சமூகப் பிரச்சினைகளையும் நிகழ்வுகளையும் அலசி ஆராயும் மிக முக்கியமான ஊடகமாக இந்நாடகம் என்ற அம்சம் பிரதிபலிப்பதனை பயிற்சிப்பட்டறையில் நான் கற்றுக் கொண்டேன்.
இப்பொழுது சமூகத்துக்கு என்னால் இயன்றளவிலான சேவையினை செய்வதற்கான மிகப்பலம்மிக்க ஆயுதமாக நாடகம் இந்த இருக்கிறது. இந்த நாடகப் பயிற்சிப் பட்டறையின் மூலம் நேர முகாமைத்துவம், பொறுமை, நிதானம், பிரச்சினைகளை இனங்கண்டு தெளிவான தீர்வுகளைப் பெறுவது போன்றவற்றைக் கற்றுக் கொண்டேன்.







0 comments:
Post a Comment