Wednesday, November 14, 2012

வானொலி நாடகப் பயிற்சிப் பட்டறையின் முதற்கட்டம்

(முஹம்மட் பிறவ்ஸ்)

வானொலி நாடகவாக்கம் மற்றும் சமூக வலுவாக்கம் தொடர்பான உயர்நிலை கற்கைநெறி தற்போது நடைபெற்றுவருகின்றது. பல்கலைக்கழக மாணவர்கள், உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் என 25 பேர் இப்பயிற்சி நெறியில் கலந்துகொள்கின்றனர். இவர்கள் நாட்டின் நாலாபுறங்களிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிம் மாணவர்களில் இளைஞர், யுவதிகள் என இருபாலினரும் உள்வாங்கப்பட்டிருந்தனர். 



முஸ்லிம்களுக்கான செயலகம் (SFM) இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவிய லாளர் மன்றத்துடன் (SDJF) இணைந்து இந்த உயர்நிலை பயிற்சிநெறியை ஏற்பாடு செய்திருந்தது. அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று இப்பயிற்சிநெறிக்காக நிதி அனுசரணையை வழங்கியுள்ளது. இதில் பங்குபற்றும் மாணவர்களுக்கு வானொலி நாடகம் தொடர்பான நுட்பங்களை வழங்கி, அதன்மூலம் முஸ்லிம் சமூகத்திலுள்ள பிரச்சினைகளை கலைத்துவத்துடன் வெளிக்கொணர்ந்து அதற்கான தீர்வுகளை அடைய முயற்சிப்பதே இப்பயிற்சிநெறியின் பிரதான நோக்கமாகும்.

இப்பயிற்சிநெறி 8 நாட்களை உள்ளடக்கிய ஒரு வதிவிடப் பயிற்சிநெறியாகும். இதன் முதல் 3 நாட்களுக்கான பயிற்சிநெறி கடந்த 5,6,7ஆம் திகதிகளில் கண்டி, அம்பிட்டியவில் உள்ள மொண்டி பானோவில் இடம்பெற்றது. பயிற்சிநெறியின் வளவாளர்களாக நாடக எழுத்தாளரும் அறிவிப்பாளருமான எம். சி. ரஸ்மின் மற்றும் பிரபல எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆரம்ப கட்டப் பயிற்சியில் முஸ்லிம் சமூகத்திலுள்ள பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டன. பின்னர் அவை வகைப்படுத்தப்பட்டன. பிரபல எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் வானொலி நாடகங்களில் முஸ்லிம்களின் பின்னணி குறித்து விளக்கமளித்தார். அடுத்து, வானொலி நாடக எழுத்தாளர் எம்.சி.ரஸ்மின் வானொலி நாடகத்திலுள்ள நுணுக்கங்கள், அதன் கட்டமைப்பு, பாத்திரங்கள், கதைக்கரு உள்ளிட்ட நாடகத்தின் அனைத்து அம்சங்களையும் செயன்முறைப் பயிற்சிமூலம் கற்பித்தார். 

பயிற்சிநெறியில் கலந்துகொண்டவர்களுக்கு பாத்திரங்களை எழுதுதல், அதற்கான சம்பவங்களை உருவாக்குதல், சம்பவங்களை வைத்து கதையை உருவாக்குதல் போன்ற குழுப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. முஸ்லிம் சமூகத்திலுள்ள பிரச்சினைகளை புதிய யுக்தியின் மூலமாக வெளிக்கொணர முயற்சிக்கும் இப்புதிய முன்னெடுப்பு பாராட்டத்தக்கது. முஸ்லிம் சமூகத்திலுள்ள சேரிப்புற வாழ்க்கை, புலம்பெயர்வு, நில அபகரிப்பு, சமூக தலைமைத்துவங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இதற்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.

இப்பயிற்சி நெறியை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்யும் மாணவர்களுக்கு இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன், அவர்கள் எழுதுகின்ற வானொலி நாடகங்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலி சேவைகளில் ஒலிபரப்பாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நன்றி: நவமணி 14.10.2012

0 comments:

Post a Comment